பொன்னேரி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
பொன்னேரி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கிலி பறிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருவேங்கிடாபுரம் கிராமத்தில் உள்ள தசரதன் நகரில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40). மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தகுமாரி (35).
இவர்கள் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வீட்டின் கதவை உள்பக்கம் தாழ்பாள் போட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சாந்தகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியே காத்திருந்த கூட்டாளியுடன் தப்பி ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திருவள்ளூர் காக்களூர் மாருதி நியூ டவுனை சேர்ந்தவர் ஷெரீப் (43). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு வெளியே சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி காஜிதா (38) மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டோ சவாரிக்கு வேண்டும் என்று கேட்டு உள்ளனர். அப்போது அவர், தனது கணவர் வீட்டில் இல்லை வெளியே சென்று உள்ளார், என கூறினார்.
போலீசார் விசாரணை
அப்போது பேச்சு கொடுத்த மர்ம நபர்கள் திடீரென காஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார் கள்.