பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு
பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு
தாராபுரம்
தாராபுரம் அருகே நடந்து சென்ற பெண் கிராம நிர்வாக அதிகாரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்றனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாலிக்கொடி பறிப்பு
தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது 38). இவர் கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு பால் வாங்க சென்றார். பின்னர் பால் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென்று ஜெயசுதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசுதா சத்தம் போட்டார். ஆனால் காலை நேரத்தில் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் போனதால் மர்ம ஆசாமிகள் எளிதாக தப்பி சென்று தலைமறைவாகினர்.
இது குறித்து ஜெயசுதா தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் முகம் பதிவாகி உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
---------------
Reporter : K. Palanivel Location : Tirupur - Dharapuram - Dharapuram