தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நேற்று (2.02.2023) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று (03.02.2023) தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.
இதன்காரணமாக (03.02.2023) இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடம் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய உள்ளது.
(04.02.2023) நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடம் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(05.02.2023 முதல் 07.02.2023) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.