தென் தமிழகம் மற்றும் டெல்டாவில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகம் மற்றும் டெல்டாவில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் டெல்டாவில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
"தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 25ஆம் தேதி காலையில் இலங்கை கடற்கரை அருகில் வரக் கூடும். அதன் பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேோரத்குற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.