தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறி இருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலின் தென்கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கிறது. சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 670 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கிறது.
இதன்காரணமாக இன்று (20.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.11.2022 நாளை வட தமிழகம், புதுவை மற்றும் காரக்கால் பகுதிகளில் ஒருசில் இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
22.11.2022 நாளை மறுநாள் வட தமிழகம், புதுவை மற்றும் காரக்கால் பகுதிகளில் ஒருசில் இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
23.11.2022 முதல் 24.11.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.