தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந்தேதி வரை (வியாழக்கிழமை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுதினமும் (புதன்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (14-ந்தேதி) கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 'தேவாலா 10 செ.மீ., அவலாஞ்சி, சின்னக்கல்லாறு தலா 9 செ.மீ., சின்கோனா, வால்பாறை தலா 9 செ.மீ., மேல்பவானி, நடுவட்டம், கூடலூர் பஜார், சோலையாறு தலா 5 செ.மீ., மேல்கூடலூர், பாரவூட், எமரால்ட் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழைபெய்து இருக்கிறது.