சந்திரசேகர சுவாமி கோவில் தேரோட்டம்
காமக்கூர் கிராமத்தில் சந்திரசேகர சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
ஆரணி
ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் உள்ள அமிர்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகர சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
. தினசரி காலை மாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. உற்சவர் அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகரசுவாமியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரிய மரத்தேரில் வைக்கப்பட்டது.
அதேபோல தேருக்கு முன்பும், பின்பும் புலி வாகனத்தில் அய்யப்பன், மயில்வாகனத்தில் முருக பெருமான், மூஷிக வாகனத்தில் விநாயகர், நால்வர் உள்பட ஐந்து சப்பரங்களில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சிவபுராணம் பாடியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் மீது உப்பு, மிளகு, பொரி உருண்டை, சாக்லேட் போன்றவற்றை நேர்த்திக்கடனாக இறைத்தனர். மேலும் தேர் சொல்லும் பகுதியில் நீர் மோர், குளிர்பானம் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் குப்புசங்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வக்கீல் கே.சங்கர், விழா குழுவினர், கிராம பொதுமக்கள், இளைஞர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.