சந்திராயன்-3 விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது


சந்திராயன்-3 விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது
x

சந்திராயன்-3 விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தின் முதன்மை பொது மேலாளர் சங்கரன் கூறினார்.

வேலூர்

சந்திராயன்-3 விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தின் முதன்மை பொது மேலாளர் சங்கரன் கூறினார்.

சந்திராயன்-3

வேலூர் வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுமார் 50,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியை கண்டு பயன் பெற்றனர்.

கண்காட்சியின் நிறைவு விழா வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் நடந்தது. விழாவில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தின் முதன்மை பொது மேலாளர் சங்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் தான் சந்திராயன்-1 மற்றும் சந்திராயன்-2 ஆகிய ராக்கெட்டுகள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன. மேலும் தற்போது சந்திராயன்-3 ராக்கெட் மிக விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வியால்தான் முடியும்

வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில், ஒரு காலத்தில் பூமிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருந்தோம். கதைகளில் தான் படிப்போம். அப்போது அமெரிக்காவும், ரஷ்யாவும் மட்டுமே விண்கலம், மனிதர்களை ராக்கெட்டுகள் மூலம் ஏவி செவ்வாய் கிரகத்திற்கும், சந்திரனுக்கும் செல்ல முடியும் என்பதை நிரூபித்தனர். ஆனால் தற்போது இந்தியா அவற்றை குறுகிய காலத்திலேயே செய்து முடிக்க முடியும் என முதல் முயற்சியிலேயே நிரூபித்துள்ளது. ஆகவே கல்வியால் தான் இந்த வளர்ச்சியை எட்ட முடியும். எனவே கல்வியால் வீடும், நாடும் நலம் பெறும் என்றார்.

சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு பேசினார். அப்போது மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும், புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். விண்வெளி ஆய்வு மையம் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story