பிளாஸ்டிக் தடை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்
உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் தடை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
ஊட்டி,
உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் தடை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
வாடகை பிரச்சினை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா ஊட்டி பிங்கர்போஸ்டில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
சட்ட விதிகளை கடைபிடிப்பது குறித்து வணிகர்களிடம் தெளிவை ஏற்படுத்த அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் வாடகை பிரச்சினையை தீர்க்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் வணிகர்கள் அடங்கிய வாடகை சீரமைப்புக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு வாடகையை சீரமைத்து நிர்ணயம் செய்யும். அதுவரை கலெக்டர், ஆணையாளர்கள் உயர்த்தப்பட்ட வாடகையை வியாபாரிகள் செலுத்த நிர்பந்திக்கக்கூடாது. கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.
மாற்றம் வேண்டும்
பிளாஸ்டிக் தடை சட்டம் பாரபட்சமாக உள்ளது. அரசு தடை செய்துள்ள 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் விற்கக்கூடாது. இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், பெரு நிறுவனங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையால் உள்நாட்டு வணிகம் அழிந்து வருகிறது. உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும்.
உணவு பாதுகாப்பு சட்டங்கள், ஜி.எஸ்.டி.யில் தொடர் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவை பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன. பிரதமரும், முதல்-அமைச்சரும் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க வேண்டும். வணிகத்தை சார்ந்து 1 கோடி பேர் உள்ளனர். இந்த பிரச்சினை தொடந்தால் 10 ஆண்டுகளில் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ரஹீம், பொருளாளர் முகமது பாரூக் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.