கனரக வாகனங்கள் போக்குவரத்து மாற்றம்


கனரக வாகனங்கள் போக்குவரத்து மாற்றம்
x

கனரக வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், பெரம்பலூர் மாவட்ட போலீசாரால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வருகிற 5-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் திருச்சியில் இருந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள காரை பிரிவு ரோட்டில் இருந்து வலது புறமாக திரும்பி, அரியலூர் சென்று அங்கிருந்து சென்னை செல்ல வேண்டும். சென்னையில் இருந்து திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து இடதுபுறமாக திரும்பி அரியலூர் வழியாக திருச்சி செல்ல வேண்டும்.

கோவில் கும்பாபிஷேகத்திற்கு திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை சிறுவாச்சூர் கிராமத்திற்கு முன்புள்ள ஆல்மைட்டி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே நிறுத்த வேண்டும். துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் பக்தர்கள் வாகனங்களை புதுவேலூர் சாலையில் உள்ள ரஞ்சனி காமராஜ் திருமண மண்டபம் அருகிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் ராம் இன் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு எதிர்புறம் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் வலது புறமாக திரும்பி, வலது புறமுள்ள கிராம சாலையில் இருந்து விளாமுத்தூர் சாலை மற்றும் நொச்சியம் சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story