பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றம்:எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் சங்கங்கள் கடிதம்
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை, ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டுக்கு, அவரது ஒப்புதல் இல்லாமல் மாற்றம் செய்தது நீதித்துறைக்கு ஆராக்கியமானது இல்லை. எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை.
சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பவர் டி.ராஜா. இவரை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட குழு (கொலீஜியம்) முடிவு செய்து ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கு வக்கீல் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து 'தி லா அசோசியேஷன்' என்ற வக்கீல் சங்கம் தீர்மானம் இயற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அதை அனுப்பியுள்ளது. அந்த தீர்மானத்தில், ''ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை, ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டுக்கு, அவரது ஒப்புதல் இல்லாமல் மாற்றம் செய்தது நீதித்துறைக்கு ஆராக்கியமானது இல்லை. எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளது.
அதேபோல, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ''சென்னை ஐகோர்ட்டில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாக பணியாற்றும் டி.ராஜா, ஏராளமான தீர்ப்புகளை வழங்கி மக்கள் நீதிபதி என்ற நற்பெயரை பெற்றுள்ளார்.
அவரை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றுவதை எங்கள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. எனவே, இந்த இடமாறுதலை கை விடும்படி, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.