திருப்பூர், கோவை, மூணாறு செல்லும் பஸ்கள் நிற்கும் நடைமேடைகள் மாற்றம்
தேனி புதிய பஸ் நிலையத்தில் திருப்பூர், கோவை, மூணாறு செல்லும் பஸ்கள் நிற்கும் நடைமேடைகள் மாற்றப்பட்டது.
புதிய பஸ் நிலையம்
தேனி புறவழிச்சாலையில் புதிய பஸ் நிலையம் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு இறுதியில் இருந்து இந்த பஸ் நிலையம் செயல்படுகிறது. இந்த பஸ் நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ளன.
சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், போடி, தேவாரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் முதலாவது நடைமேடையிலும், திண்டுக்கல், பழனி, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ராஜபாளையம், நாகர்கோவில், கம்பம், குமுளி, மூணாறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் 2-வது நடைமேடையிலும் நிறுத்தப்பட்டு வந்தன.
3-வது நடைமேடையில் திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும், கடமலைக்குண்டு, வருசநாடு மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுண் பஸ்களும் நிறுத்தப்பட்டு வந்தன.
நடைமேடைகள் மாற்றம்
3-வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள், அனைத்தும் புறவழிச்சாலையில் இருந்து திட்டச்சாலை வழியாக பஸ் நிலையத்துக்குள் வந்து சென்றன.
அந்த பஸ்கள், நடைமேடைக்கு செல்லும் முன்பு இதர பஸ்கள் வெளியேறும் பகுதியில் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி சென்றதால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
திருப்பூர், கோவை செல்லும் பயணிகளும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு உடைமைகளை தூக்கிச் செல்ல சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து பஸ் நிலைய பகுதியில் நெரிசலை குறைக்கும் வகையில் பஸ்கள் நிறுத்தும் நடைமேடைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி திருப்பூர், கோவை செல்லும் பஸ்கள் 3-வது நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடையில் மூணாறு பஸ்கள் நிறுத்தப்பட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டன. மூணாறு செல்லும் பஸ்கள் 2-வது நடைமேடையில் இருந்து முதலாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன.
புதிய பாதை தேவை
எந்த முன்னறிவிப்பும் இன்றி நடைமேடைகள் மாற்றப்பட்டதால், பயணிகள் வழக்கமாக பஸ்கள் நிற்கும் இடத்துக்கு சென்று ஏமாற்றத்துடன் அடுத்த நடைமேடைக்கு செல்கின்றனர். மேலும் இந்த நடைமேடை மாற்றத்தால் 3-வது நடைமேடையில் உள்ள கடைகளை ஏலம் எடுத்து நடத்தி வந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், 3-வது நடைமேடைக்கு செல்லும் பஸ்கள் தொடர்ந்து திட்டச்சாலையில் சென்று வருவதால் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. எனவே, 2-வது நடைமேடை தொடங்கும் இடத்தில் உள்ள இலவச கழிப்பிடத்தில் இருந்து 3-வது நடைமேடைக்கு பஸ்கள் செல்வதற்கு புதிதாக பாதை அமைத்தால் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் ஒரே பாதையில் வந்து செல்லும். மாற்றுப் பாதையில் வெளியேறும். நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.