பருத்தியில் சப்பாத்தி பூச்சி தாக்குதல்


பருத்தியில் சப்பாத்தி பூச்சி தாக்குதல்
x

திருக்கடையூர் பகுதியில் பருத்தியில் சப்பாத்தி பூச்சி தாக்குதலால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்

திருக்கடையூர் பகுதியில் பருத்தியில் சப்பாத்தி பூச்சி தாக்குதலால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருத்தி சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்கடையூர், ஆக்கூர், டி.மணல்மேடு, நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூர், கண்ணங்குடி, கிள்ளியூர், மாத்தூர், அன்னப்பன்பேட்டை, பிள்ளைபெருமாநல்லூர், வளையல் சோழகன், கிடங்கல், மாமாகுடி, காலமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது வளர்ந்து வெடிக்கும் நிலையில் பருத்தி செடிகள் உள்ளது.

ஆனால், பருத்தி செடிகளில் சப்பாத்தி பூச்சிகள், பருத்திகாய் புழுக்கள், அசுவினி பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் பருத்தியில் அதிக அளவில் சப்பை கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பருத்திக்கு நல்லவிலை கிடைப்பதால் இந்த ஆண்டு மகசூல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பருத்தியில் சப்பாத்தி பூச்சி மற்றும் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருவதால் பருத்திக்கு செலவு செய்த பணத்தையாவது எடுக்க முடியுமா? என்று தெரியவில்லை.

ஆகவே, திருக்கடையூர் பகுதியில் சப்பாத்தி பூச்சி தாக்குதல் உள்ள வயல்களை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



Next Story