ஆந்திர மாநில வாலிபர் கோர்ட்டில் சரண்


ஆந்திர மாநில வாலிபர் கோர்ட்டில் சரண்
x

கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, ஆந்திர வாலிபர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

திண்டுக்கல்

பழனி அடிவாரம் பூங்கா ரோட்டை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 30). தங்கும் விடுதியில் தொழிலாளியாக வேலை பார்த்தார். கடந்த 2009-ம் ஆண்டு இவர், அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆந்திர மாநிலம் கார்லாதின்னே சஞ்சவபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (35) என்பவருக்கும், அண்ணாத்துரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் ஓட்டல் அருகே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து அண்ணாத்துரையை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அண்ணாத்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராமகிருஷ்ணனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவர், திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி லதா முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story