குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில் தேரோட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில் தேரோட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காரைக்குடி
தைப்பூசத்தை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில் தேரோட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தைப்பூச திருவிழா
காரைக்குடி அருகே உள்ளது குன்றக்குடி. இங்கு புகழ்பெற்ற சண்முகநாதபெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த மாதம் 25-ந்தேதி அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை மற்றும் 26-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு 8 மணிக்கு சண்முகநாதபெருமான், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளிக்கேடகத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ம் திருநாள் அன்று இரவு தங்கரதத்திலும், 8-ம் திருநாள் அன்று வெள்ளி ரதத்திலும் சண்முகநாதபெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய விழாவாக 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சண்முகநாதபெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தேரில் எழுந்தருளி சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
பின்னர் மாலை 5.20 மணிக்கு கோவில் முன்பு தேரோட்டம் நடைபெற்றது. அதற்கு முன்பாக பலத்த மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து தேரோட்டத்தின் போது அவ்வப்போது சாரல் மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து அரோகரா கோஷத்துடன் இழுத்தனர்.
மஞ்சுவிரட்டு
தேர் கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் சண்முகநாதபெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இன்று 10-ம் நாள் ஏராளமான பக்தர்கள் காவடி, பூக்காவடி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். மேலும் இன்று காலை 11 மணிக்கு சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மதியம் 1 மணிக்கு சின்னக்குன்றக்குடியில் உள்ள தோனாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. தேரோட்ட விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.