பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சாமி கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ம் நாளையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. பெரிய தேரில் சுவாமி, அம்மனும், சிறிய தேரில் பாகம்பிரியாள் அம்மனும், முன்னதாக விநாயகர் வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சப்பரத்திலும் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு அம்மன் சன்னதிக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து மாலையில் அம்மன் சன்னதி முன்பு இருந்து மீண்டும் தேரோட்டம் தொடங்கியது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகள் வழியாக மாலை 6 மணியளவில் தேர் நிலையை சென்றடைந்தது. பின்னர் சுவாமி அம்மன் தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை மணிகண்ட குருக்கள் வல்மீகநாத குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதில் திருவெற்றியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், திருவாடானை யூனியன் தலைவர் முகம்மது முக்தார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.