ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டம்
திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசமாக விளங்கும் இந்த பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவின் 9-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ராமபிரான் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக பட்டாபிஷேக ராமர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வாசல் அருகே உள்ள நிலையில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினார்.
தேரோட்டத்தினை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். கோவிலின் வாசல் பகுதியில் இருந்து தொடங்கிய தேரினை ஏராளமான பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பக்தி கோஷத்துடன் இழுத்து சென்றனர்.
கடற்கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி
கோவிலின் ரத வீதிகளை சுற்றியபடி பக்தர்களின் வெள்ளத்தில் வந்த தேரானது மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தின் போது தேருக்கு முன்பாக ராமநாதபுரம் சிலம்பாட்ட குழுவை சேர்ந்த சிலம்பொலி பாலா தலைமையில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றிய படியும், கட்டைக்கால் கம்பு வைத்து நடனமாடியபடியும் ஊர்வலமாக வந்தனர்.
திருவிழாவின் 10-வது நாள் நிகழ்ச்சியாக பட்டாபிஷேக ராமர் மற்றும் பெருமாள் சேதுக்கரை கடற்கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 7-ந் தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா முடிவடைகின்றது.