திருஉத்திரகோசமங்கை கோவிலில் தேரோட்டம்


திருஉத்திரகோசமங்கை கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை திருவிழாவையொட்டி திருஉத்திரகோசமங்கை கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

சித்திரை திருவிழாவையொட்டி திருஉத்திரகோசமங்கை கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்ட திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டின் சித்திரை திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் 9-வது நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்ட திருவிழா நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் எதிரே நிலையில் நிறுத்தப்பட்டிருந்த தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான பரம்பரை தர்மகர்த்தா ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார், ராஜா நாகேந்திர சேதுபதி, திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் தேரின் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். நிலையிலிருந்து தொடங்கிய தேரை திரளான பக்தர்கள் இழுத்தபடி கோவிலின் 4 ரதவீதி வழியாக இழுத்து வந்தனர். 4.30 மணியளவில் நிலையிலிருந்து புறப்பட்ட தேரானது மீண்டும் 6.30 மணியளவில் வந்தடைந்தது.

சிலம்பாட்டம்

இந்த தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருஉத்திரகோசமங்கை கோவிலில் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போதுதான் புதிதாக தேர் செய்யப்பட்டது.

2-வது ஆண்டாக புதிய தேரில் தேரோட்டம் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தேருக்கு முன்பாக ராமநாதபுரம் சிலம்பாட்ட குழுவை சேர்ந்த லோகசுப்பிரமணியன் தலைமையில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றியபடியும், கட்டைக்கால் கம்பு வைத்து நடனமாடியபடியும் சென்றனர். இதனை பக்தர்கள் பார்த்து ரசித்தனர். இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story