சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்


சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
x

சங்ககிரியில் கொட்டும் மழையில் சென்னகேசவ பெருமாள் கோவில் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

சேலம்

சங்ககிரி

சங்ககிரி சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவபெருமாள் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சங்ககிரி சோமேஸ்வரர் கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தேரில் சென்னகேசவபெருமாள் சாமி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 3.45 மணியளவில் சிறிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதி வழியாக இழுத்து வந்து பெரியதேர்அருகில் நிலை நிறுத்தினார்கள். பின்னர் மாலை4.15 மணியளவில் பெரியதேரில் சென்ன கேசவ பெருமாள் உற்சவர் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.

இதில், முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான டி.எம்.செல்வகணபதி, சங்ககிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) தணிக்காசலம், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் மங்கையகரசி, சங்ககிரி பேரூராட்சி மன்ற தலைவர் மணிமொழி, சங்ககிரி இந்துசமய அறநிலையத்துறை செயல்அலுவலர் சங்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், திருவிழா ஆலோசனைகுழு உறுப்பினர்கள் சுந்தரம், என்.ஆர்.எஸ்.கந்தசாமி, கே.எம்.முருகன், சரவணன், சண்முகசுந்தரம், சுந்தரேசன் உள்பட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரவு 7 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் நனைந்தபடியே முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். பின்னர் சிறியதேர் அருகே பெரியதேரை கொண்டு சென்று நிலை நிறுத்தினார்கள்.


Next Story