அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேல்மலையனூர்:
மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 18-ந் தேதி மாசிப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 19-ந் தேதி மயானக் கொள்ளை விழாவும், 22-ந்தேதி தீமிதி விழாவும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
தேரோட்டம்
விழாவையொட்டி பனை, காட்டுவாகை, புளி, சவுக்கு உள்ளிட்ட மரங்களால் புதிய தேர் செய்யப்பட்டு, அலங்கரித்து வடக்கு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த தேரில் உற்சவ அம்மன் வைக்கப்பட்டதும், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி கோவிலை சுற்றியது. அப்போது பக்தர்கள் தங்கள் வயலில் விளைந்த நெல், மணிலா உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் வேடமணிந்த திருநங்கைகள், தேரின் முன்பு ஆடியபடி சென்றனர்.
உள்ளூர் விடுமுறை
விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி, ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், கவுன்சிலர் யசோதரை சந்திரகுப்தன், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் புனிதா சரவணன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட் டிருந்தது குறிப்பிடத்தக்கது.