பங்குனி உத்திர திருவிழா:மயிலம் முருகன் கோவில் தேரோட்டம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில் வடிவமலையில் பிரசித்தி பெற்ற வள்ளிதெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகப் பெருமான் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, இரவில் சாமி மலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 8-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து, வெள்ளி குதிரை வாகனத்தில் முருகன் மலை வலம் வரும் காட்சி நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகர், வள்ளி-தெய்வானை முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர், காலை 6 மணிக்கு உற்சவர் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.
அதை தொடர்ந்து, மயிலம் 20-ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் விநாயகர் தேரையும், அதை தொடர்ந்து முருகன் தேரையும் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
காவடி எடுத்து நேர்த்திக்கடன்
இதை தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களை விண்ணதிர எழுப்பி வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்றது, மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்மணி, மணிலா போன்ற தானியங்களை தேர் மீது வாரி இறைத்து மழை நன்றாக பொழிய வேண்டி தரிசனம் செய்தனர். விநாயகர் தேர் காலை 6.50 மணிக்கும், முருகன் தேர் 7.15 மணிக்கும் நிலையை வந்தடைந்தது. முன்னதாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தி வந்தும், முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
தெப்ப உற்சவம்
விழாவின் 10-ம் நாளான இன்று (புதன்கிழமை) தெப்ப உற்சவமும், நாளை (வியாழக்கிழமை) முத்துப்பல்லக்கில் சாமி மலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.