பெரியநாயகி அம்மன் கோவிலில் தேர் திருவிழா
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே சித்தலூர் ஊராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசி மாத தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமிக்கு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மயான கொள்ளை விழா நடைபெற்றது. தொடர்ந்து 10-வது நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தோில் பெரியநாயகி அம்மன் சாந்த நிலையில் எழுந்தருள அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது. இதில் தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், பரம்பரை தர்மகத்தாக்கள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.