ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம்
மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ராமேசுவரம்,
மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ராமேசுவரம் கோவில்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.
இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 9-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து நேற்று காலை சுவாமி பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், அம்பாள் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
தேரோட்டம்
விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும் சுவாமி-அம்பாள் தேரை கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், நகரசபை தலைவர் நாசர்கான், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கிய சுவாமி-அம்பாள் தேரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாய நம, சிவாய நம என பக்தி கோஷத்துடன் இழுத்து வந்தனர்.
கிழக்கு வாசல் இருந்து புறப்பட்ட தேரானது தெற்கு, மேற்கு, வடக்கு ரதவீதி சாலை வழியாக பகல் 12.20 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் தேருக்கு முன்பாக தங்க முகப்பட்டை அணிந்து கம்பீரமாக கோவில் யானை ராமலட்சுமி வலம் வந்தது பக்தர்களை பரவசமடைய வைத்தது.
போலீஸ் பாதுகாப்பு
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கோவிலின் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், நேர்முக உதவியாளர் கமலநாதன், பேஸ்கார் முனியசாமி, காசாளர் ராமநாதன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன். கவுன்சிலர்கள் முகேஷ்குமார், சத்யா, முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சங்கர், பா.ஜனதா கட்சியின் நகர தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவி, பா.ஜனதா ராணுவ பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் பூபதி, ஈஷா ஜெயந்தி, விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் மலைசாமி, நகர் பொதுச் செயலாளர் முருகன், நகர் செயலாளர் கணேசன், ஓ.பி.சி.அணி நகர் தலைவர் சங்கிலி குமரன், நகர் இளைஞர் அணி தலைவர் ஞானகுரு, நகர்பொருளாளர் சுரேஷ், சங்கரமட மேலாளர் ஆடிட்டர் சுந்தர், அனந்தபத்மநாதசர்மா, நகர் செயலாளர் நம்புபிச்சை, சிருங்கேரி மட கார்த்திக், யாத்திரை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, ரமேஷ், நம்புராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தங்க குதிரை வாகனத்தில்...
இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் திட்டக்குடியில் உள்ள கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மீண்டும் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைந்தனர். திருவிழாவின் 10-வது நாள் மற்றும் மாசி அமாவாசையை முன்னிட்டு இன்று பகல் 12 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்த வாரி வழங்கும் நிகழ்ச்சிக்கு எழுந்தருளுகின்றனர்.