குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தக்கலை,
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேரோட்டம்
தக்கலை அருகே உள்ள பிரசித்தி பெற்ற குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-வது நாளான நேற்று காலையில் தேர் திருவிழா நடந்தது.
இதனையொட்டி காலை 7.30 மணிக்கு விநாயகர் ஒரு தேரிலும், முருகப்பெருமானும், வள்ளிதேவியும் இன்னொரு தேரிலும் எழுந்தருளினர். பின்னர் தேர்கள் ரதவீதிகளின் வழியாக உலா வந்தது.
இந்த நிகழ்ச்சியில் தேவசம்போர்டு தொகுதி கண்காணிப்பாளர் சண்முகம்பிள்ளை, மேலாளர் மோகன்குமார், திருவிழாக்குழு காப்பாளர் பிரசாத், தலைவர் சுனில்குமார், செயலாளர் சுரேஷ்குமார், இந்து முன்னணி நிர்வாகிகள் மிசா சோமன், செந்தில் மற்றும் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த தேரானது ஒருமுறை வலம் வந்த பிறகு தேர்பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. அதே சமயத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தரிசனத்திற்காக மாலை வரை சாமிகள் தேரில் அமர்ந்திருந்தனர். அதன் பிறகு மயில் வாகனத்தில் முருகப்பெருமானும், கிளி வாகனத்தில் வள்ளிதேவியும், பூ பல்லக்கில் விநாயகரும் எழுந்தருளியபடி கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு பள்ளி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் 10-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் தெப்பக்குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த தேர் திருவிழாவின் போது பிரச்சினை ஏற்பட்டதால் இந்தாண்டு நேற்று நடந்த தேர் திருவிழாவின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.