திருமயம் அருகே ஆனி மாத திருமஞ்சன விழாவையொட்டி தேரோட்டம்


திருமயம் அருகே ஆனி மாத திருமஞ்சன விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

புதுக்கோட்டை

கால பைரவர் கோவில்

திருமயம் அருகே உள்ள துர்வாசபுரம் கால பைரவர் கோவிலில் ஆனி மாத திருமஞ்சன திருவிழா கடந்த 18-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் காலபைரவர், பாதம்பிரியாள், சுந்தரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தது. இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாணிக்கவாசகர் பல்லக்கில் வைத்து வீதியுலா வந்தார்.

கடந்த 24-ந் தேதி மாலை விநாயகர், நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், அழகு நாச்சியார் ஆகிய சுவாமிகள் சப்பரத்தில் வீதியுலா வந்தனர். நேற்று முன்தினம் சிப்பந்திகள் மண்டகப்படி நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் பல்லக்கில் தூக்கி வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினார்கள். அதனைதொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி பக்தர்கள் நடுவே ஆடி அசைந்து வந்தது. பின்னர் பக்தர்கள் ஆங்காங்கே அர்ச்சனை செய்து வழிபட்டனர். தேரடியை அடைந்தவுடன் பக்தர்கள் கைத்தட்டி கரகோஷம் எழுப்பினார்கள். இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்து இருந்தனர்.


Next Story