கலியுக மெய்ய அய்யனார், பூமீஸ்வரர் கோவில்கள் தேரோட்டம்


வடவாளம், கடியாபட்டி காணபேட்டையில் கலியுக மெய்ய அய்யனார், பூமீஸ்வரர் கோவில்கள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

கலியுக மெய்ய அய்யனார் கோவில்

ஆலங்குடி செம்பட்டிவிடுதி அருகே வடவாளத்தில் கலியுக மெய்ய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனித்திருவிழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

பக்தர்கள் வெள்ளத்தில் தேர்

இதையடுத்து சிறிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகரும், பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் கலியுக மெய்ய அய்யனாரும் எழுந்தருளினர். இதையடுத்து வாணவேடிக்கை மற்றும் மேள தாளம் முழங்க அமைச்சர் மெய்யநாதன், முத்துராஜா எம்.எல்.ஏ., தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நான்கு வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் வடவாளம், இச்சடி, சின்னகாயாம் பட்டி, காயாம்பட்டி, கண்ணக்காரன்பட்டி, சின்னையாசத்திரம் உள்ளிட்ட 18 பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வடவாளம் கிராமத்தார்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

பூமீஸ்வர சுவாமி கோவில்

திருமயம் அருகே கடியாபட்டி காணபேட்டையில் பிரம்ம வித்யாம்பாள் உடனுறை பூமீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.

இதனை தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

திரளான பக்தர்கள் தரிசனம்

இதையடுத்து விநாயகர், முருகன் சமேத வள்ளி-தெய்வானை, பூமீஸ்வர சுவாமி, பிரம்ம வித்யாம்பாள் அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து விநாயகர் தேரை பக்தர்கள் முன்னே இழுத்துச் செல்ல அதன் பின் மற்ற தேர்களை பக்தர்கள் எழுத்து சென்றனர்.

தேர்களை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) தீர்த்தவாரி, மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை (செவ்வாய்க்கிழமை) தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.


Next Story