கும்பகோணம் ரெயில் நிலைய மேம்பாட்டிற்கான வரைவு திட்டம் தயார்


கும்பகோணம் ரெயில் நிலைய மேம்பாட்டிற்கான வரைவு திட்டம் தயார்
x

வருகை, புறப்பாடுக்கு தனித்தனி முனையங்களுடன் 145 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் ரெயில் நிலைய மேம்பாட்டிற்கான வரைவு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்

வருகை, புறப்பாடுக்கு தனித்தனி முனையங்களுடன் 145 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் ரெயில் நிலைய மேம்பாட்டிற்கான வரைவு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கும்பகோணம் ரெயில் நிலையம்

தெற்கு ரெயில்வேயின் மறுவளர்ச்சி திட்டத்தில் மேம்படுத்தப்பட கண்டறியப்பட்ட 4 ரெயில் நிலையங்களில் கும்பகோணம் ரெயில் நிலையமும் ஒன்றாகும். பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பல்வேறு புதிய வசதிகள், இதுவரை உள்ள வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட உள்ள இந்த திட்டத்திற்கான கட்டுமான பணிகளை தெற்கு ரெயில்வேயின் கட்டுமான அமைப்பு மேற்கொள்ள உள்ளது.

கும்பகோணம் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான முழுதிட்டத்தை தயார் செய்வதற்கு நாக்பூரை சேர்ந்த தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரெயில்வே நிர்வாகம் நியமித்தது. இதையடுத்து இந்த நிறுவனம் வரைவு கருத்துரு திட்டத்தை தெற்கு ரெயில்வே கட்டுமான அமைப்பிடம் சமர்ப்பித்து உள்ளது.

தனித்தனி முனையங்கள்

வரைவு கருத்துரு திட்டத்தில் வருகை, புறப்பாடுக்கு என தனி முனையங்கள், பயணிகள் காத்திருப்பு அரங்கு, பசுமை கட்டிடங்கள், ரெயில் நிலையம் அருகில் பயணிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் தெற்கு ரெயில்வே கட்டுமான அமைப்பின் உயர் அதிகாரிகள், திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகளின் தீவிர ஆலோசனைக்கு பின்னர் இந்த திட்டம் ரெயில்வே ஆணையத்திடம் சமர்பிக்கப்பட உள்ளது.

40 ஆண்டுகளுக்கு...

இந்த திட்டம் செயல்பட தொடங்கியது முதல் 40 ஆண்டுகளுக்கு பயணிகளின் போக்குவரத்தை சமாளிக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரைவு திட்டத்திற்கு ரெயில்வே ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகு இதற்கான நிதி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஆணையத்திற்கு நிதி ஒதுக்கீடு வேண்டி அனுப்பப்படும்.

கும்பகோணம் ரெயில் நிலைய மேம்பாடு திட்டம் பொறியியல், கொள்முதல், கட்டுமானம் என்ற முறையில் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிக வருவாய்...

145 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் ரெயில் நிலையம், திருச்சி ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரெயில் நிலையங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story