உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வெயிலுகந்த விநாயகர் கோவில்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ந்தேதி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கோவில் முன்பு உள்ள ெகாடிமரத்தில் கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது.

இதையொட்டி மூலவர் விநாயகருக்கும் உற்சவமூர்த்தி விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உப்பூர், கடலூர், மோர்ப்பண்ணை கிராமத்தார் மற்றும் மண்டகப்படியார்கள் முன்னிலையில் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

மண்டகப்படி

இதனை தொடர்ந்து நேற்று இரவு உப்பூர் காந்தி தேவர், குமரய்யா தேவர் ஆகியோரின் முதல் நாள் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் விநாயகர் வெள்ளி முஷிக வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(திங்கட்கிழமை) இரண்டாம் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் காலை ஊரணங்குடி தேவதாஸ் நிகழ்விலும் இரவு கடலூர் மதியரசு தேவர், ராஜேந்திரன் அம்பலம் ஆகியோரின் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் விநாயகர் கேடகத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதுபோல் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு மண்டகப்படியார் நிகழ்ச்சியில் வெயிலுகந்த விநாயகர் சிம்ம வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், காமதேனு வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

திருக்கல்யாணம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 17-ந் தேதி மாலை 4 மணிக்கு விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிேயாருடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. .18-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

19-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் சதுர்த்தியை முன்னிட்டு உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணதேவர் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் விநாயகர் கோவிலில் இருந்து சப்தவர்ணம் வெள்ளி கோ ரதம், ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. உப்பூர் கடலில் தீர்த்தம் ஆடி தீர்த்தவாரி பூஜைகள் முடிந்த பின்னர் மேளதாளங்கள் முழங்க விநாயகர் கோவிலை வந்தடைந்த உடன் பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, பறவை காவடி எடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் பூ இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இரவு வெட்டுக்குளம் வாசுதேவன் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் விநாயகர் வெள்ளி கோ ரதம் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் சரக பொறுப்பாளர் பாண்டியன், மண்டகப்படியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story