மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 6 பேருக்கு ரூ.5 லட்சம் காசோலை
திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 6 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 6 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை, காவல்துறை, பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள், கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 390 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 6 நபர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார். மேலும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடனுதவிபெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தனித்துனை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உள்ளிட்ட அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆம்பூர் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், ''எங்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது. இதனால் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இறால் மீன்கள் வளர்ப்பு பண்ணையில் காவல் பணிக்கு செல்வதற்காக துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
==========