தமிழக-கர்நாடக எல்லையில் அதிநவீன சோதனைச்சாவடி அமைக்கப்படுமா?


தமிழக-கர்நாடக எல்லையில் அதிநவீன சோதனைச்சாவடி அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்குள் குட்கா கடத்தல் அதிகரித்துள்ளதால் அதை தடுக்க தமிழக - கர்நாடக எல்லையில் அதிநவீன வசதிகள் கொண்ட சோதனைச்சாவடி அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

தமிழகத்திற்குள் குட்கா கடத்தல் அதிகரித்துள்ளதால் அதை தடுக்க தமிழக - கர்நாடக எல்லையில் அதிநவீன வசதிகள் கொண்ட சோதனைச்சாவடி அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகத்தின் நுழைவுவாயில்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தமிழக-கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாநகரமாகும். ஓசூர் ஜூஜூவாடியை அடுத்து கர்நாடக மாநில எல்லை தொடங்குகிறது. தினமும் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் பிற பகுதிகளில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஓசூர் வழியாக தமிழகத்திற்குள் வருகின்றன.

இதனால் ஓசூரை தமிழகத்தின் நுழைவுவாயில் என்று அழைக்கிறார்கள். இத்தகைய ஓசூர் வழியாக பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தமிழகத்தில் குட்கா, பான்பராக், ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை உள்ளது. ஆனால் கர்நாடகாவில் இதற்கு தடைகள் இல்லை.

பலமடங்கு லாபம்

இதனால் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், மதுபாட்டில்கள், பாக்கெட்டுகளை வாகனங்களில் கடத்தி வந்து தமிழகத்திற்குள் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். இவ்வாறு எடுத்து சென்று அவற்றை பல மடங்கு லாபம் வைத்து விற்பனை செய்கிறார்கள். உதாரணமாக ரூ.20-க்கு வாங்க கூடிய ஹான்ஸ் பாக்கெட்டை, தமிழகத்தில்ரூ.50-க்கு விற்பனை செய்கிறார்கள்.

இதனால் கர்நாடகாவில் இருந்து சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் கொண்டு வரப்படுகின்றன. இதை காவல் துறையினர் சோதனைச்சாவடிகள் மூலமாக தடுத்து சோதனைகள் செய்தாலும், ஆம்னி பஸ்களிலும், சாதாரண பஸ்களில் பயணிகளை போலவும் குட்கா கடத்தும் படலம் தொடர்ந்து வருகின்றன.

அதிநவீன சோதனைச்சாவடி

இதைத்தவிர கர்நாடகாவில் கொலை செய்து, ஓசூர் பகுதியில் சாலையோரத்தில் உடல்களை போட்டு செல்வதும் அவ்வப்போது நடக்கின்றன. மாநில எல்லையில் காவல் துறையினர் 24 மணி நேரமும் விழிப்புடன் பணியாற்றினாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில வாகனங்களில் குட்கா கடத்தல் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகிறது.

இதை தடுக்க தமிழக-கர்நாடக மாநில எல்லையில் ஓசூரில் அதிநவீன சோதனைச்சாவடி ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்றும், அதில் கார், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சோதனை செய்திடும் வகையில், வாகன கவுண்டர்கள் அமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இது குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

தீவிரப்படுத்த வேண்டும்

ஓசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நீலகண்டன்:-

கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா மற்றும் சட்ட விரோதமாக பொருட்கள் கடத்துவதை தடுக்க ஓசூரில் சோதனைகள் தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு தற்போதுள்ள சோதனைச்சாவடிகள் போதாது. ஒரு வாகனத்தை சோதனை செய்யும் போதே, மற்றொரு வாகனம் வேகமாக அருகிலேயே சென்று விடுகிறது. எனவே அனைத்து வாகனங்களும் நின்று அதை சோதனை செய்து அனுப்ப கூடிய வகையில் அதிநவீன சோதனைச்சாவடி அமைக்க வேண்டும். மேலும் குட்கா கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சோதனைச்சாவடி

ஓசூரை சேர்ந்த ரகு:-

பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய கார்கள் மட்டுமல்லாமல், ஆம்னி பஸ்கள், சாதாரண பஸ்கள் அனைத்தையும் போலீசார் கண்காணிக்க வேண்டும். பஸ்களில் மூட்டை மூட்டைகளாக குட்கா கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். பலர் இருசக்கர வாகனங்களில் குட்கா, மதுபாக்கெட்டுகள் கடத்தி வருகின்றனர். மேலும் ஓசூர் நகரின் வளர்ச்சியை கருதி குட்கா கடத்தலை அடியோடு தடுக்க கர்நாடக, தமிழக எல்லையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன சோதனைச்சாவடியை அமைக்க வேண்டும்.


Next Story