செல்லியம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா
செல்லியம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா வந்தார்.
புள்ளம்பாடி ஒன்றியம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மன் தினமும் காளை, சிங்கம், யானை, அன்னபட்சி, மயில், காமதேனு, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இளைஞர்கள் குழு சார்பாக இன்னிசை நிகழ்ச்சியும், 11 மணியளவில் செல்லியம்மன் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் சக்திவேல், நத்தமாங்குடி ஆலங்குடி மகாஜனம், முள்ளாள், கோவாண்டகுறிச்சி, புள்ளம்பாடி, ஆலம்பாக்கம், புதூர் பாளையம், வாணதிரையான்பாளையம், கல்லக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் சரவணன், கருப்புடையார், சுந்தரம், சுகுமார், குறிஞ்சிபழனிசாமி, தங்கையன், சந்திரன் மற்றும் கிராமஇளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.