திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி
கடலின் உப்பு காற்றில் இருந்து பாதுகாக்க 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி,
கடலின் உப்பு காற்றில் இருந்து பாதுகாக்க 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
திருவள்ளுவர் சிலைக்கு...
புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் அதன் தன்மை மாறாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு இந்த ரசாயன கலவை பூசப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. இதற்கிடையே பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் திருவள்ளுவர் சிலைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
ரசாயன கலவை பூசும் பணி
அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ரூ.1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணிக்காக டெண்டர் விடப்பட்டது.
இந்தநிலையில் ரசாயன கலவை பூசும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். இந்த பணியை வருகிற நவம்பர் 1-ந் தேதிக்குள் முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் பொதுமக்கள் பார்வைக்காக திருவள்ளுவர் சிலை திறந்து விடப்படும்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் சீதாராமன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக செயற்பொறியாளர் சீனிவாசன் (மதுரை மண்டலம்), கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.