தஞ்சை பெரியகோவில் விமான கோபுரத்தில் ரசாயன கலவை பூசும் பணி விரைவில் தொடக்கம்


தஞ்சை பெரியகோவில் விமான கோபுரத்தில் ரசாயன கலவை பூசும் பணி விரைவில் தொடக்கம்
x

தஞ்சை பெரிய கோவில் விமான கோபுரத்தில் படிந்துள்ள பறவைகள் எச்சம், மழைநீரால் பாசி படிந்திருப்பதை அகற்றும் வகையில் ரசாயன கலவையால் வர்ணம் பூசும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், பணிகள் மேற்கொள்வது குறித்து தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை பெரிய கோவில் விமான கோபுரத்தில் படிந்துள்ள பறவைகள் எச்சம், மழைநீரால் பாசி படிந்திருப்பதை அகற்றும் வகையில் ரசாயன கலவையால் வர்ணம் பூசும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், பணிகள் மேற்கொள்வது குறித்து தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப்பிறகு கோவில் குடமுழுக்கு நடைபெற்றதையொட்டி அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் உள்ள திருச்சுற்று மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன. மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் கோபுரம், விமான கோபுரம், பெரியநாயகி அம்மன், முருகர், நடராஜர், விநாயகர் சன்னதி கோபுரங்களும் ரசாயன கலவை மூலம் வர்ணம் பூசப்பட்டது.

வர்ணம் பூசும் பணி

அதன்படி விமான கோபுரத்தில் படிந்திருந்த பறவைகளின் எச்சங்கள், மழைநீரால் படிந்திருந்த பாசிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ததோடு, பழமை மாறாமல் இருப்பதற்காக ரசாயன கலவை பூசும் பணியும் நடைபெற்றது. சிதிலமடைந்து இருந்த சுதை சிற்பங்களும் சீரமைக்கப்பட்டன. இந்த பணிகள் 2018-19-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விமான கோபுரலத்தில் உள்ள கலசமும் தங்க முலாம் பூசப்பட்டது. கொடிமரம் புதிதாக நடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இதனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தஞ்சை பெரிய கோவில் பழமை மாறாமல் ரசாயன கலவை கொண்டு வர்ணம் பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

விமான கோபுரத்தில் ஆய்வு

அதன்படி வருகிற நிதி ஆண்டு முதல் (ஏப்ரல் மாதத்திற்கு பிறகு) வர்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தொல்லியல் துறையினர் நேற்று 216 அடி விமான கோபுரத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். தொல்லியல் துறையை சேர்ந்த 4 பேர் நேற்று கயிறு உதவியுடன் விமான கோபுரத்தின் மீது ஏறி ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். 1 மணி நேர ஆய்வுக்குப்பின்னர் அவர்கள் கீழே இறங்கி வந்தனர்.இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், தஞ்சை பெரிய கோவிலில் உள்ள விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் ரசயான கலவையுடன் வர்ணம் பூசும் பணி வருகிற ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடைபெற உள்ளது. மழைநீரால் பாசி படியாமல் இருப்பதற்காகவும், பறவைகளின் எச்சத்தை அகற்றி அதன் பொலிவு மாறாமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ரசாயன கலவை

மேலும் கோபுரத்தில் வேறு ஏதும் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதா? சிற்பங்கள் எதுவும் சிதிலமடைந்து உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதனை எவ்வாறு சரி செய்வது? ரசாயன கலவை பூசுவது எப்படி? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான கோபுரத்தில் வர்ணம் பூசும் பணி நிறைவடைந்ததும் இதர கோபுரத்திலும் பணிகள் மேற்கொள்ளப்படும்"என்றனர்.


Next Story