செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா
கோவில்பட்டியில் நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது. செண்பகவல்லி அம்மன் கோவில்
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.
செண்பகவல்லி அம்மன் கோவில்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 11-ம் நாளான நேற்று நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் தெப்பத்திருவிழா நடந்தது.
இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனங்களில் பூவனநாதர்- செண்பகவல்லி அம்மன் திருவீதி உலா டி.பி.ஆர்.மணி, எம். கோபி குழுவினர் நாதஸ்வர இசையுடன் புறப்பட்டு, எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு, மெயின் ரோடு வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்து, பின்னர் தெப்பக்குளத்திற்கு வந்தடைந்தது.
தெப்பத் திருவிழா
இதனைத் தொடர்ந்து சுவாமி- அம்பாள் கோவில் திருக்குளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்கு எழுந்தருளினார்கள். நிகழ்ச்சிக்கு நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச் செல்வம், துணை தலைவர் எம்.செல்வராஜ் தலைமை தங்கினார்கள். சங்க செயலாளர் எஸ்.ஆர். ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர். சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா எஸ்.எம். மாரியப்பன் முன்னிலை வகித்தனர். காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல் நிலைபள்ளி பொருளாளர் ஏ.செல்வம் வரவேற்றார். தெப்பத் திருவிழாவை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
தெப்பத்தில் சுவாமி- அம்பாள் 9 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். விழாவையொட்டி கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அன்னதானம் வழங்கப் பட்டது. மெயின் ரோடு காமராஜர்சிலை அருகில் நெல்லை எஸ்.ஆர். சந்திரன் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சிநடந்தது.