சென்னை பயிற்சி மையம், மாணவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
நீட் தேர்வு பயிற்சிக்கான ஆன்லைன் இணைப்பை துண்டித்த சென்னையை சேர்ந்த பயிற்சி மையம், மாணவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
நீட் தேர்வு பயிற்சிக்கான ஆன்லைன் இணைப்பை துண்டித்த சென்னையை சேர்ந்த பயிற்சி மையம், மாணவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
நீட் தேர்வு பயிற்சி மையம்
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த செல்வதுரை மகன் முகேஷ் என்பவர் கடந்த 2020 ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் பயிற்சியில் சேர்ந்துள்ளார். இதற்கு அந்த மையத்திற்கு ஆன்லைன் மூலம் ரூ.32,572 கட்டணமாக செலுத்தியுள்ளார்.
ஆன்லைன் வகுப்பு தொடங்கி 15 நாட்களில் முகேஷ் தனக்கு வகுப்பு திருப்திகரமாக இல்லை, புரியவில்லை என்று பயிற்சி மையத்திற்கு போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் இணைப்பு துண்டிப்பு
அதற்கு உரிய விளக்கம் அளிக்காமல், ஆன்லைன் வகுப்பிற்குறிய மெட்டீரியலை அனுப்பாமல் இருந்ததுடன், ஆன்லைன் வகுப்பிற்கான இணைப்பையும் துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவர் முகேஷ், வக்கீல் மூலம் சென்னை பயிற்சி மையத்துக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியபோது, அந்த மையத்தின் கதவு பூட்டப்பட்டிருப்பதாக நோட்டீஸ் திரும்பி வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர் முகேஷ், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.25 ஆயிரம் இழப்பீடு
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், சென்னையை சேர்ந்த பயிற்சி மையம் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் நீட் ேதர்வு பயிற்சி திருப்தி அளிக்கவில்லை என்றால் பணம் திரும்ப தரப்படும் என அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் மாணவர் கட்டிய பணத்தை கணக்கிட்டு திரும்ப வழங்க வேண்டும். மேலும் மாணவருக்கு உரிய மெட்டீரியல் வழங்காதது மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கான இணைப்பை துண்டித்தது போன்றவற்றை சேவை குறைபாடாக இந்த ஆணையம் கருதுகிறது. அதற்கு இழப்பீடாக மாணவருக்கு, அந்த பயிற்சி மையம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்
மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தொகையினை தீர்ப்பளித்த நாளில் இருந்து 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.