சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 'இந்திய மின்னணுவியலின் எதிர்காலம்' குறித்த கருத்தரங்கம்
இந்திய மின்னணுவியலின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கம் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.
சென்னை,
மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சென்னை ஐ.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி.யின் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுன்டேஷன்ஸ் சார்பில் இந்தியாவின் மின்னணுவியலின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.
மேலும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி, திருவனந்தபுரம் மேம்பட்ட கணினி சிறப்பு மையத்தின் (சி.டி.ஏ.சி.) மூத்த இயக்குனர் கிருஷ்ணகுமார், 'ரிஸ்க்பைவ்' இன்டர்நேஷனல் தலைமை செயல் அதிகாரி கேலிஸ்தா ரெட்மாண்ட் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொழில்நுட்பம்
மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பேசியதாவது:-
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை புதுமைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கும் ஒரு நாடாக இந்தியா இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு தொழில்நுட்பங்களின் புத்தாக்கம், கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னணி நிலைக்கு உயரவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவருடைய தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில், உலகில் உள்ள மற்ற நாடுகளை போலவே செமிகான் திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது "டி.ஐ.ஆர்.-வி'' என்ற தொழில்நுட்ப திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எதிர்கால இந்தியாவுக்கும், உலகிற்கும் பயனளிக்கும் கணினி சார்ந்த மைக்ரோ பிராசசர்களை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் உருவாக்குவது திட்டத்தின் இலக்காக இருக்கிறது. மேலும் டி.ஐ.ஆர்.-வி தொழில்நுட்பத்தை, ஐ.எஸ்.ஏ. (இன்டர்நேஷனல் செட் ஆர்க்கிடெக்சர்) என்ற தொழில்நுட்பமாக ஆக்குவதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது. மேலும் நமக்கு தேவையான தொழில்நுட்பங்கள், திறன்களை உறுதி செய்வது நமது குறிக்கோளாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.