பட்டாசு வெடிக்கும்போது கவனம் தேவை... சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்!


பட்டாசு வெடிக்கும்போது கவனம் தேவை... சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்!
x
தினத்தந்தி 7 Nov 2023 10:26 AM IST (Updated: 7 Nov 2023 12:55 PM IST)
t-max-icont-min-icon

கையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு, கொளுத்திப்போடுவது மிக மிக ஆபத்தான விஷயம் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் வருகிற 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை சென்னை மாநகர காவல்துறை வழங்கியுள்ளது.

அதன்விவரம் பின்வருமாறு:-

* சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பசுமை பட்டாசுகளை காலை 7-8 மணி வரை, இரவு 7-8 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும்.

* இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் நிறுத்தியுள்ள இடங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் அமைந்துள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.

* பட்டாசு விற்கும் கடைகளுக்கு அருகே சென்று புகைப் பிடிக்கவோ பட்டாசு வெடிக்கவோ கூடாது, ஈரமான பட்டாசுகளை சமையலறையில் உலர்த்த கூடாது.

* கால்நடைகளுக்கு அருகில் சென்று பட்டாசு வெடிப்பதால் அவை மிரண்டு ஓடி, நடந்து செல்பவர்கள் மீது முட்டி விபத்து ஏற்படும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும்.

* கையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு, கொளுத்திப்போடுவது மிக மிக ஆபத்தான விஷயம். இம் மாதிரி பட்டாசு வெடிக்கையில்தான், உடலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும். அதனால் கையில் வைத்து பட்டாசு கொளுத்துவதை தவிருங்கள்.

* விபத்து ஏற்பட்டால் காவல்துறை அவசர உதவி எண் 100, தீயணைப்பு உதவி எண் 101, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, தேசிய உதவி எண் 112 உள்ளிட்டவற்றை அழைக்கலாம்.

* தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்றுவதாலோ அல்லது தண்ணீருக்குள் கை, கால்களை முக்குவதாலோ கொப்பளம் உண்டாகலாம். கொப்பளங்கள் வந்தாலும் பயப்பட வேண்டாம். அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story