சென்னையில் 18-ந் தேதி தொ.மு.ச. பேரவை பொன்விழா மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்


சென்னையில் 18-ந் தேதி தொ.மு.ச. பேரவை பொன்விழா மாநாடு:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
x

சென்னையில் 18-ந் தேதி நடைபெறுகிற தொ.மு.ச. பேரவை பொன்விழா மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார்.

தொ.மு.ச. பேரவை (தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை) பொன்விழா மாநாடும், 25-வது பொதுக்குழு கூட்டமும் 16 (நாளை), 17, 18-ந் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. காலை 10 மணிக்கு பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பேசுகின்றனர். பிற்பகல் 2 மணிக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., பொதுக்குழுவை தொடங்கி வைத்து பேசுகிறார்.

பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., ஆண்டறிக்கையை தாக்கல் செய்கிறார். பொருளாளர் கி.நடராஜன் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்கிறார். மாலை 5 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கில் 'சமூகநீதி' என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., 'ஜனநாயகம்' என்ற தலைப்பில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, 'தொழில் வளர்ச்சி' என்ற தலைப்பில் சி.மகேந்திரன் (சி.பி.ஐ.), 'தொழிலாளர் நலன்' என்ற தலைப்பில் சு.வெங்கடேசன் எம்.பி. (சி.பி.ஐ.) ஆகியோர் பேசுகின்றனர்.

நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு குழு விவாதம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பொதுக்குழுவில் தீர்மானங்கள் வைத்து ஒப்புதல் பெறப்படுகிறது.

மாநாட்டின் கடைசி நாளான 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் வாழ்த்தரங்கில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் பொன்முடி, கனிமொழி கருணாநிதி எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதிமாறன், உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

மாலை 4 மணிக்கு சிவானந்தா சாலையில் பேரணியை தி.மு.க. முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். இரவு 7 மணிக்கு தி.மு.க. தலைவர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். மேலும், தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோரும் பேசுகின்றனர்.

இந்த தகவல்கள், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.


Next Story