சென்னை வானொலி முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை வானொலி முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அனைத்திந்திய வானொலியின் கொல்கத்தா முதன்மை அலைவரிசை ஜூன் 30-ந் தேதி நள்ளிரவுடன் மூடப்பட்டு இருக்கிறது. இது மேற்கு வங்க வானொலி நேயர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதை விட அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவென்றால், சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவை எந்த நேரமும் நிறுத்தப்படக்கூடும். அதில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் 'ரெயின்போ' பண்பலையில் ஒலிபரப்படும்.

சென்னை-ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும். தனித்துவமான அதன் நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர்.

மூடக்கூடாது

தமிழ் பண்பாடு, கலைகள் ஆகியவற்றின் தூதராகவும் இந்த அலைவரிசை திகழ்கிறது. இந்த அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும். பிரசார்பாரதியின் செலவுகளைக் குறைப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது.

வருவாயை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே எந்த நிறுவனத்தையும் லாபத்தில் இயக்க முடியுமே தவிர, செலவுகளை குறைப்பதால் அல்ல என்பதை பிரசார்பாரதி நிர்வாகம் உணர வேண்டும். நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தி வானொலிகளின் வருவாயை அதிகரிக்க செய்ய வேண்டும். சென்னை-ஏ அலைவரிசை உள்ளிட்ட அகில இந்திய வானொலியின் எந்த அலைவரிசையையும் மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story