அரியவகை பாம்பு-பல்லிகளை கடத்திய சென்னை வாலிபர் கைது


அரியவகை பாம்பு-பல்லிகளை கடத்திய சென்னை வாலிபர் கைது
x

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பாம்புகள் மற்றும் பல்லிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன்(வயது 30) என்ற பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் ஏதோ உருவங்கள் நகர்வது போன்று தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை தனியே அழைத்து சென்று, அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 47 அரியவகை பாம்புகள் மற்றும் 2 பல்லி வகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவை மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து முகமது மொய்தீனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

வனத்துறையினர் சோதனை

மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருச்சி மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து பாம்புகள் மற்றும் பல்லிகளை சோதனை செய்து வருகின்றனர். அந்த பாம்புகள் மற்றும் பல்லிகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிகிறது. இதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story