ஜூலை 28-ந்தேதி, நேரு விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா


ஜூலை 28-ந்தேதி, நேரு விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா
x

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28-ந்தேதி நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த போட்டியின் தொடக்க விழா ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளர் அபூர்வா, செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் தாரேஸ் அகமது,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கே.பி.கார்த்திகேயன், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், கவுரவ செயலாளர் பரத்சிங் சவுகான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடக்க விழா

பின்னர் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது:-

செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் பங்கேற்க 187 நாடுகள் பதிவு செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

அதன் தொடக்க விழா ஜூலை 28-ந் தேதி ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அந்த விளையாட்டுப் போட்டிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக விளையாட்டு வீரர்களை பஸ்களில் அழைத்து வர திட்டமிடப்பட்டு உள்ளது.

அறைகள் முன்பதிவு

மேலும் 187 நாடுகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் தங்க ஏதுவாக இ.சி.ஆர். சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். செஸ் உலக அரங்கில் சிறந்து விளங்கும் அனைத்து வீரர்களும் பங்கேற்க உள்ள தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடத்தி முடிக்க பல்வேறு குழுக்களை தமிழக அரசு அமைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story