தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து பாம்பனுக்கு கடலோர காவல் படை படகில் பயணித்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து இந்திய கடலோர காவல் படை படகில் கடல் மார்க்கமாக பாம்பனுக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்து வரப்பட்டது.
ராமேசுவரம்,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
இதையொட்டி கடந்த மாதம் 18-ந்தேதி டெல்லியில் செஸ் ஒலிம்பியாட் குறித்த தொடர் ஜோதி பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள், ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த ஜோதியானது நேற்று ராமேசுவரம் கொண்டுவரப்பட்டது.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை, மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கிவைத்தார்.
படகில் பயணித்தது
மாணவர்கள் அந்த ஜோதியை, அரிச்சல்முனை சாலையில் இருந்து கடற்கரை வழியாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடலோர காவல் படை படகின் பெண் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அவர் கையில் ஜோதியுடன் கம்பீரமாக படகில் நிற்கவே, அங்கிருந்து புறப்பட்ட இந்திய கடலோர காவல்படையின் ஹோவர் கிராப்ட் படகு, ராமேசுவரம், பாம்பன் கடல் வழியாக, பாம்பன் கடற்கரை கொண்டுவரப்பட்டு மீண்டும் கடற்கரையில் இருந்த மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து பாம்பன் ரோடு பாலம் வழியாக நடந்த தொடர் ஜோதி ஓட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் மண்டபம் கடற்கரை பூங்கா வரை கொண்டுவரப்பட்ட ஜோதி மீண்டும் கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.