செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணி


செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணி
x

வேலூரில் நடந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூரில் நடந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு ஒலிம்பியாட் ஜோதி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி பல்வேறு மாவட்டங்கள் வழியாக வேலூர் மாவட்டத்துக்கு இன்று காலை வந்தது.

விளையாட்டு வீரர்கள் கொண்டு வந்த ஜோதியை வள்ளிமலை கூட்ரோட்டில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பெற்று கொண்டார். பின்னர் அந்த ஜோதி வேலூர் கோட்டை மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டது.

அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டை மைதானத்தில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு பேரணி

வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பளுதூக்கும் வீரர் முத்துவிடம் வழங்கினார். பின்னர் கலெக்டர் பேரணியில் கலந்து கொண்டார்.

கோட்டை மைதானத்தில் இருந்து புறப்பட்ட பேரணி அண்ணாசாலை, மக்கான் சிக்னல், வடக்கு போலீஸ் நிலையம், பழைய மீன்மார்க்கெட் வழியாக வந்து மீண்டும் கோட்டை மைதானத்தில் நிறைவடைந்தது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். வீரர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு கையில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பதாகைகளை ஏந்தியபடியும், சிறுவர்கள் ஊர்வலத்துக்கு முன்பு சிலம்பம் சுற்றியும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், 1-வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேரணிக்கு பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Related Tags :
Next Story