பள்ளி மாணவர்களுக்கு செஸ் பயிற்சி
ஜக்கனாரை ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி,
சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்தது. இதைதொடர்ந்து தமிழகத்தில் செஸ் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் செஸ் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சி சார்பில், கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் செஸ் விளையாட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் மாணவர்களை பங்கு பெற செய்வது என ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் முடிவு செய்து உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று அரவேனு பஜாரில் ஜக்கனாரை ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் செஸ் விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது. சுள்ளிக்கூடு அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை மலர்விழி செஸ் விளையாட்டு குறித்தும், அதன் நுணுக்கங்கள் குறித்தும் எடுத்து கூறினார். இதுகுறித்து ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ் கூறும்போது, தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்கள் செல்போன் மோகத்தால் கல்வி, நினைவுத்திறன், கண்பார்வை குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. அவர்களது நினைவுத்திறனை அதிகரித்து, விளையாட்டில் சாதிக்க செஸ் விளையாட்டு உதவும். இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்து உள்ளோம் என்றார்.