போடி அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்: தீப்பற்றி எரிந்த தாயை கட்டிப் பிடித்த மாணவி
போடி அருகே தீப்பற்றி எரிந்த தாயை மாணவி கட்டிப் பிடித்தார். இதில் இருவரும் உடல் கருகி பலியாகினர்.
தீக்குளிப்பு
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுச்சாமி (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (28). இவர்களது மகள் ஹேமா (8). பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். முத்துலட்சுமி வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் நல்லுச்சாமி வேலைக்கு சென்று விட்டார். முத்துலட்சுமி தனது மகளுடன் வீட்டில் இருந்தார். இதையடுத்து முத்துலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
தாய்-மகள் சாவு
இதில் அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது அங்கு இருந்த ஹேமா தனது தாய் மீது தீப்பற்றி எரிந்த அதிர்ச்சியில் அம்மா என அலறிக்கொண்டு ஓடி வந்து அவரை கட்டிப் பிடித்தார். இதில் ஹேமா மீதும் தீப்பற்றியது. இதனால் 2 பேரும் வலியால் அலறி துடித்தனர்.
இவர்கள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் 2 பேர் மீதும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதையடுத்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.