கறிக்கோழி இறைச்சி கிலோ ரூ.260-க்கு விற்பனை
வேலூரில் வரத்து குறைவால் கறிக்கோழி இறைச்சி விலை உயர்ந்து கிலோ ரூ.260-க்கு விற்பனையானது. அதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
அசைவ உணவு
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கறிக்கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மாதத்தில் ஒன்று அல்லது 2 நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே அசைவம் சாப்பிட்ட நிலை தற்போது மாறிவிட்டது. வாரவிடுமுறை, பண்டிகை நாட்கள் மட்டுமின்றி வாரத்தின் பாதி நாட்களில் அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் கறிக்கோழி இறைச்சி தவறாமல் இடம் பிடித்துள்ளது.
ஆட்டிறைச்சியை விட விலை குறைவு, சமைப்பது எளிது, சுவை அதிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோழி இறைச்சி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஓட்டல்களிலும் கோழி இறைச்சியின் பயன்பாடு அதிகளவு காணப்படுகிறது.
ரூ.260-க்கு விற்பனை
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. அதனால் மீன்வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. அதன்காரணமாக கோழி இறைச்சியை பலரும் ஆர்வத்துடன் வாங்க தொடங்கி உள்ளனர். அக்னி நட்சத்திரம் முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதனால் கறிக்கோழி இறைச்சி உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து உள்ளது. நாட்டுக்கோழியை விட விலை குறைவு என்பதால் பொதுமக்கள் கறிக்கோழி இறைச்சியை தான் விரும்பி வாங்குகிறார்கள்.
இறைச்சியின் பயன்பாடு அதிகரிப்பு, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் வேலூரில் கறிக்கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வேலூரில் கடந்த வாரம் கறிக்கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.230 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று ஒரு கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்து ரூ.260-க்கு விற்பனையானது. உயிருடன் கோழி ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.440-க்கும், ஆட்டிறைச்சி ரூ.700 முதல் ரூ.750-க்கும், காடை ரூ.60-க்கும், முட்டை ஒன்று ரூ.6-க்கும் விற்பனையானது.
விலை உயரும் அபாயம்
வரத்து குறைவால் கறிக்கோழி இறைச்சி விலை உயர்ந்து வருவதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். தொடர்ந்து கறிக்கோழி இறைச்சி விலை அதிகரித்தால் ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் 65, கிரில் சிக்கன், ஷவர்மா, சிக்கன் லெக் பீஸ் போன்ற உணவு வகைகளின் விலை உயரும் அபாயம் உள்ளது என்று வேலூரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.