வயல் வரப்பில் உளுந்து சாகுபடி


வயல் வரப்பில் உளுந்து சாகுபடி
x
தினத்தந்தி 19 Jan 2023 10:15 AM IST (Updated: 19 Jan 2023 10:15 AM IST)
t-max-icont-min-icon

வடபாதிமங்கலம் பகுதியில் வயல் வரப்பில் உளுந்து சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவாரூர்

வடபாதிமங்கலம் பகுதியில் வயல் வரப்பில் உளுந்து சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

வரப்பு உளுந்து சாகுபடி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும் 2 போக நெல் சாகுபடி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த 2 போக சாகுபடிக்கான அறுவடை பணிகள் முடிந்த பிறகு மீதமுள்ள நாட்களில், மாற்று பயிராக உளுந்து, பயறு மற்றும் பருத்தி சாகுபடி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில விவசாயிகள், வயல்களில் மேடான பகுதியாக உள்ள வரப்புகளில் வரப்பு உளுந்து பயிர் சாகுபடியை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் வரப்பு உளுந்து சாகுபடியில் பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. என்றாலும், வரப்பு உளுந்து சாகுபடியை விவசாயிகள் நிறுத்தவில்லை.

மகசூல் அதிகரிப்பு

தொடர்ந்து ஆண்டுதோறும் வரப்பு உளுந்து பயிர் சாகுபடி செய்து வந்தனர். இந்த சாகுபடியில் படிப்படியாக மகசூல் அதிகரித்து வருகிறது. இதனால், வரப்பு உளுந்து சாகுபடி செய்ய அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நடப்பு ஆண்டு நெல் அறுவடைக்கு பிறகு விவசாயிகள் உளுந்து பயறு சாகுபடி செய்து வருகின்றனர். இதில், வடபாதிமங்கலம் பகுதியில் 75 எக்டேரில் வரப்பு உளுந்து பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

மானியம்

இது குறித்து வடபாதிமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி நேதாஜி கூறுகையில் 'வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வரப்பு உளுந்து பயிர் சாகுபடி செய்து வருகின்றோம். இந்த ஆண்டு வரப்பு உளுந்து பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில், வடபாதிமங்கலம், வேளாண்மை துணை விரிவாக்க மையத்தில் வரப்பு உளுந்து பயிருக்கான விதை மானிய விலையில் 1 கிலோ ரூ.75-க்கு வழங்கப்படுகிறது. இதனால், அதிகளவில் விவசாயிகள் வரப்பு உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர்.

வயலில் சாகுபடி செய்யப்படும் உளுந்து சாகுபடியை விட வரப்பு உளுந்து சாகுபடி அதிக மகசூலை தருகிறது. இந்த வரப்பு உளுந்து பயிருக்கு அதிகளவில் தண்ணீர் தேவைப்படாது. மேலும், பனிப்பொழிவு பயிர்கள் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.

மருந்து

இந்த பயிருக்கு பூக்கும் தன்மைக்காக ஒரே ஒரு முறை மட்டுமே மருந்து தெளித்தல் போதுமானது. 1 செடியில் 15 காய் காய்க்கும் பட்சத்தில் மருந்து தெளிப்பின் மூலம் 30 காய் காய்க்கும். செடிகளும் நன்றாக அடர்த்தியாக வளரும். மேடான இடத்தில் வரப்பு உளுந்து பயிர் சாகுபடி செய்வதால் மழை தண்ணீரால் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.


Next Story