சிதம்பரம் அண்ணாமலைநகர்அரசு மருத்துவக்கல்லூரியில் அறுவை அரங்கு கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்
சிதமம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை அரங்கை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.
அண்ணாமலைநகர்,
கலெக்டர் ஆய்வு
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அறுவை அரங்கை திறந்து வைத்த அவர் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவின் செயல்பாடுகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு சிகிச்சை பிரிவின் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது சிதம்பரம் உதவி கலெக்டர் சுவேதாசுமன், அரசு மருத்துவக்கல்லூரி புல முதல்வர் டாக்டர் திருப்பதி, கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர் சுந்தரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அடிப்படை வசதிகள்
முன்னதாக அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி மாவட்ட கலெக்டரை சந்தித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தார்.அப்போது பேரூராட்சி செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.