சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x

தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறி சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

புவனகிரி,

சிதம்பரம் சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் கடந்த மே மாதம் செமஸ்டர் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் பல மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரியர் எழுதிய பல மாணவர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இது தவிர பெரும்பாலான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் மாணவர்கள் கேட்டனர். ஆனால் நிர்வாகத்தினர் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது.

சாலை மறியல்

இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கல்லூரி முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேர்வு முடிவு குளறுபடிக்கு காரணமான திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story