சிதம்பரம் நடராஜர் கோவில் நகைகளை 2-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோவில் நகைகளை 2-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு சரிபார்த்து மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் நகைகளை மீண்டும் சரிபார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் இந்து சமய அறநிலையத்துறையினர் நடராஜர் கோவிலுக்கு வந்தனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பொது தீட்சிதர்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் இந்துசமய அறநிலையத்துறையினர் நகையை சரிபார்க்காமல் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நடராஜர் கோவில் நகைகளை சரிபார்க்க இந்து சமய அறநிலையத்துறையினருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி நேற்று காலையில் இந்து சமய அறநிலையத்துறையின் தங்க நகை மதிப்பீட்டு குழுவினரான கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி, திருவண்ணாமலை மாவட்ட துணை ஆணையர் குமரேசன், விழுப்புரம் மாவட்ட துணை ஆணையர் சிவலிங்கம், நகை மதிப்பீட்டு வல்லுனர்கள் திருச்சி தர்மராஜன், திருவண்ணாமலை குமார், விழுப்புரம் குருமூர்த்தி ஆகியோர் கோவில் தேவசபையில் அமர்ந்து நகைகளை ஆய்வு செய்வது தொடர்பாக தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தி நகை இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து நகைகள் இருக்கும் அறைக்கு சென்று சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடராஜர் கோவில் நகைகளை 2-வது நாளாக சரிபார்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் 6 பேர் கொண்ட குழுவினர் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலில் உள்ள தேவ சபையில் அமர்ந்து நகைகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.